சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மலர்விழி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 160 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல் வழங்கப்பட்டு 2013–14–ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் தற்போது கூடுதலாக வழிகாட்டுதல்களும் அரசால் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்எதிர்வரும் 2017–18–ம் கல்வியாண்டிற்கு சிவகங்கை மாவட்டத்திலுள்ள 160 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 2,267 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு இ–சேவை மையங்களிலும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். நாளை(20–ந்தேதி) முதல் அடுத்த மாதம் 18–ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ்கள்நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்கள் எடுத்துவர வேண்டும்.
மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.