பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 260 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-18 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 260 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும். தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். தற்கொலை செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரே‌ஷன் அரிசி மாதம் தோறும் 30 கிலோ வழங்க வேண்டும். எரிவாயு மானியம் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 7 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாநகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநகர செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் துணைத்தலைவர்கள் சந்தணசேகர், மாடசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.

260 பேர் கைது

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், எட்டயபுரம், குறுக்கு சாலை, ஏரல், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 260 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்