மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-04-17 22:47 GMT

புதுச்சேரி,

புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கமணி மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து வாகன சோதனையில் ஈடுபடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தார். அவரை விரட்டிப் பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அந்த வாலிபரை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

விசாரணையில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த மாருதி குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாருதி குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மேலும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொருவனும் சிக்கினான்

ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று காலை புஸ்சிவீதி–ஆம்பூர்சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக்(34) என்பது தெரியவந்தது. அவன் ஓட்டி வந்ததும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. அவனை கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்