ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கின
புதுவை ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின.
புதுச்சேரி,
புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் பிளஸ்–2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. இந்த பயிற்சியில் சேர அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் மட்டும் புதுவை காமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளியில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளையும் இந்த பயிற்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதை ஏற்று அத்தகைய மாணவ, மாணவிகளும் பயிற்சியில் சேர்க்கப்பட்டனர்.
120 பேர் தேர்வுஇதன்படி 50 மாணவர்கள், 70 மாணவிகள் என 120 பேர் நீட் தேர்வு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காரமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப்பள்ளியில் இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. இந்த பயிற்சிகள் வருகிற 5–ந்தேதி வரை நடக்கிறது.
பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை நடக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பிற்பகல் 3.30 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின்போது இடைவேளை நேரத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இந்த பயிற்சிகளை அளிக்கிறார்கள். பயிற்சியின்போது அவ்வப்போது மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தவும், இனி வரும் ஆண்டுகளில் இதைவிட கூடுதல் நாட்கள் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.