போரூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ம.க. போராட்டம்

சென்னை போரூர் அருகே ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி

Update: 2017-04-17 21:42 GMT

பூந்தமல்லி,

 பா.ம.க.வினர் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

சென்னை போரூரில் இருந்து ஆலப்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடை மாநில நெடுஞ்சாலையான போரூர்–ஆற்காடு சாலையில் இருந்து 300 மீட்டருக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த கடையை அகற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட முன்னாள் பா.ம.க. தலைவர் ஆலப்பாக்கம் சேகர் தலைமையில் பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் 50 பேர் ஊர்வலமாக சென்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது மதுக்கடையை திறக்கக்கூடாது என்று கூறி, டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் அவர்களை கைது செய்த போலீசார் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பொதுமக்களுக்கு சிரமம்

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–

இந்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு பகுதியில் மட்டும் 7–க்கும் மேற்பட்ட அரசு மதுபானக்கடைகள் உள்ளது. மேலும் சில கடைகளை இந்த பகுதியில் அமைக்க அரசு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். மேலும் இந்த கடை நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது.

இந்த பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளது. குடிமகன்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதில் இரா.குமார், சீனிவாசன் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்