வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-17 23:00 GMT
நாகப்பட்டினம்,

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக்கோரி நாகை அவுரித்திடலில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க நாகை, திருமருகல் ஒன்றிய குழுக்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் நாகரத்தினம், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் தமீம்அன்சாரி, திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை ஒன்றிய செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

ஆண்டு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் எம்.பி. செல்வராசு நன்றி கூறினார்.

வேதாரண்யம்

இதேபோல் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க கீழையூர், தலைஞாயிறு ஒன்றிய குழுக்கள் சார்பில் திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சொக்கலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய தலைவர்கள் கண்ணையன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் தம்புசாமி, ஒன்றிய செயலாளர் செல்வம், விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் நாகராஜன், ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் மற்றும் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மகாலிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் இளங்கோவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்