கள்ளக்காதலியை எரித்துக்கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலியை உயிருடன் எரித்துக்கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2017-04-17 22:45 GMT

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மனைவி சசிகலா (வயது 26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (30). டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

சசிகலாவுக்கும், கண்ணதாசனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்ணதாசன் கேட்கும்போதெல்லாம் அவரது செலவுக்காக சசிகலா, தனது நகைகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

எரித்துக்கொலை

ஒரு கட்டத்தில் தான் கொடுத்த நகைகளை சசிகலா திருப்பிக்கேட்டதால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணதாசன், கள்ளக்காதலி சசிகலா மீது மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தார். இதில் படுகாயம் அடைந்த சசிகலா, பரிதாபமாக இறந்தார்.

கடந்த 2012–ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தொடர்பாக அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில் அவர், கள்ளக்காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்