குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கடவூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-04-17 22:45 GMT
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் வடக்கு பகுதியில் காலனி உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து ஆழ்குழாய் கிணற்று நீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகிலேயே தனியார் ஒருவர் ஆழ்குழாய் கிணறு அமைத்ததால் ஊராட்சி ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்