பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பாஸ்போர்ட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி பாஸ்போர்ட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-17 23:00 GMT
திருச்சி,

விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள பாஸ்போர்ட்டு அலுவலகத்தை (இ -சேவை மையம்) ஏப்ரல் 17-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாஸ்போர்ட்டு அலுவலகம் முன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பாஸ்போர்ட்டு அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த போலீசார் விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம் வைத்து இருக்கிறார்களா? என சோதனை செய்த பின்னரே உள்ள செல்ல அனுமதித்தனர்.

160 பேர் கைது

அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பினர் கையில் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி பாஸ்போர்ட்டு அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் வாசலில் தடுத்து நிறுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடி உருவ முக மூடி அணிந்திருந்த ஒருவரை தோளில் தூக்கி வைத்து கொண்டு வந்தனர். அவர் விவசாயிகளின் கழுத்தில் தூக்கு கயிறை போட்டு இறுக்குவது போன்றும், விவசாயிகள் பரிதாபமாக அலறுவது போன்றும் சித்தரித்து காட்டினார்கள். அப்போது சிலர் அந்த முக மூடியை செருப்பால் அடித்தனர். பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக கோஷமும் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டத்துக்கு தலைமை தாங்கிய திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 40 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் தில்லை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்