நெல்லையில் ‘106.7 டிகிரி’ வெயில் அனல் காற்று வீசியதால் பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையும், அதை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டதால் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது.

Update: 2017-04-17 22:45 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் மள,மளவென்று குறைந்து விட்டது. குடிநீருக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோடை காலத்தில் கால்நடைகளின் தாகம் தீர்க்கும் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் குளங்கள், பாளம், பாளமாக வெடித்து கிடக்கின்றன. கால்நடைகள் பச்சை புற்கள் கிடைக்காமல் காய்ந்த இலை, சருகுகளை உண்டு வாழ்ந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வெயில் அதிகம்

இந்த கொடுமைகளுக்கு இடையே நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

நேற்று முன்தினம் ‘105.8 டிகிரி‘ வெயில் பதிவாகி இருந்தது. நேற்று அதிகபட்சமாக ‘106.7 டிகிரி‘ வெயில் பதிவாகியது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் வெயில் குறைந்து குளிர்ச்சி நிலவும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த காலங்களில் நெல்லை மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டினாலே பொதுமக்கள் அதை பெரிதாக எண்ணுவார்கள். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அடிப்பதால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை வெயில் தாண்டி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அனல் காற்று வீசியது

நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒருசில இடங்களில் அனல் காற்று வீசியது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். முகம் மற்றும் உடலில் தீயால் சுடுவது போல் அனல் காற்று கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் துணியால் தலை, முகப்பகுதியை மூடிக்கொண்டு வாகனங்களில் பயணம் செய்தனர். மேலும் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

வெளியில் நடமாடிய சிலர் ஆங்காங்கே கிடைத்த தண்ணீர், இளநீர், குளிர்பானங்களை வாங்கி பருகிக்கொண்டு கோடை வெப்பத்தால் ஏற்பட்ட களைப்பை நீக்க முயற்சி செய்தனர். வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, நொங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடந்தது.

மேலும் செய்திகள்