தாராபுரத்தில், வறட்சி நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் கைது

தாராபுரத்தில் வறட்சி நிவாரணம் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 70 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2017-04-17 23:15 GMT

தாராபுரம்

மத்திய, மாநில அரசுகள் விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.25 ஆயிரம் உடனே வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஆண்டு முழுவதும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் குறைந்த பட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.400 வழங்க வேண்டும்.

இந்த திட்டத்தில் ஊழல் முறைகேடுகளை நடைபெறுவதை தடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 6 மாதமாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

70 விவசாய தொழிலாளர்கள் கைது

இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினர். நிர்வாகிகள் தர்மன், கருப்புசாமி, மாயாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாராபுரம் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 70 விவசாய தொழிலாளர்களை கைதுசெய்தனர்.

பின்னர் அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் தாராபுரம்–பழனி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்