டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டர், தாசில்தாரிடம் மனு

காங்கேயம் அருகே டாஸ்மாக் கடை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை மனு கொடுத்துள்ளனர்.

Update: 2017-04-17 22:45 GMT

காங்கேயம்

காங்கேயம் அருகே உள்ள வீராணம்பாளையம் சாத்திரவலசு கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தியிடம் நேற்று மனு ஒன்று கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் இருப்பதாவது:–

காங்கேயம் அருகே உள்ள வீராணம்பாளையம் கிராமத்தில் காங்கேயம் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுள்ளார். இந்த நிலத்திற்கு உத்தேச பட்டா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் உத்தேச பட்டாவை கொண்டு சட்டத்திற்கு புறம்பாக கிரயம் செய்து சப்–டிவி‌ஷன் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தாராபுரம் மற்றும் காங்கேயம் நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது.

எனவே, இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை ஆட்சேபித்தும், சர்ச்சைக்குரிய நிலத்தை கிரயம் செய்த பத்திர பதிவுத்துறை மற்றும் அதற்கு துணைபோன இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆவணங்களை முறையாக சரி பார்க்காமல் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கிய டாஸ்மாக் கடை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிராம மக்கள்

காங்கேயம் அருகே, சென்னிமலை செல்லும் சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இந்த கடைக்கு மாற்று இடமாக நால்ரோட்டிலிருந்து கீரனூர் கிராமம்செல்லும் சாலையோரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுகாலை சாலை மறியல் செய்ய நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் கூட்டம் சேர்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து காங்கேயம் தாசில்தார் வெங்கடலட்சுமி,போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோரிடம் சென்று மனு கொடுத்தனர். அதில், நால்ரோடு சுற்றுவட்டாரத்தில் 700–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கீரனூரைச்சுற்றியுள்ள பூமாண்டன் வலசு, ரெட்டி வலசு, செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபடும் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்தக் கடை அமைந்தால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும். இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்