வடமதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 7 பேர் படுகாயம்

வடமதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-04-17 22:30 GMT

வடமதுரை

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னன் (வயது 55). செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (45). இவர்கள், இருவரும் ஒரு மினிவேனில் விறகுகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த கார் ஒன்று, மினிவேன் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினிவேனில் வந்த பொன்னன், வெள்ளைச்சாமி இருவரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தடுப்புச்சுவரில் மோதியது

வடமதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டியை சேர்ந்த வீரமணி மகன் கருப்பையா (22). இவருடைய நண்பர் வீரமணி (25). இவர்கள் இருவரும் ஒரு காரில் திருச்சி– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிக்கருப்பணசாமி கோவில் அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த கருப்பையாவும், வீரமணியும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 2 விபத்துகள் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி

திண்டுக்கல் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). வியாபாரி. இவர் ஒரு லாரியில் தர்பூசணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த கீரனூர் அருகே சென்றுகொண்டிருந்தார். லாரியை தினேஷ் (29) என்பவர் ஓட்டினார். உதவியாளராக ராமு என்ற பிரசாத் உடன் சென்றார்.

இந்தநிலையில டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் சுப்பிரமணி, டிரைவர் தினேஷ் மற்றும் உதவியாளர் ராமு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்