மணல் குவாரியை மூடக்கோரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் மணல் குவாரியை மூடக்கோரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-17 23:00 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சுள்ளங்குடி ஊராட்சி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி கடந்த இரண்டு ஆண்டாக இயங்கி வருகிறது. இங்கிருந்து லாரிகளில் மணல் ஏற்றி வருபவர்கள் திருமானூர் வழியாக கொள்ளிட ஆற்றின் கரையை போக்குவரத்திற்காக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப் படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தியும், மேலும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி நீராதாரத்தை காக்க வலியுறுத்தியும் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை சிறை பிடித்து திருமானூர் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்

அப்போது கொள்ளிட கரையில் உள்ள இடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போது அவ்வழியே மணல் குவாரி லாரிகள் அடுத்தடுத்து செல்வதால் மிகுந்த சிரமமாக இருக்கிறது எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த மறியலில் காங்கிரஸ் மகளிரணி மாநில செயலாளர் மாரியம்மாள், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த அரியலூர் தாசில்தார் முத்துகிருஷ்ணன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதிதரும்படி கேட்டு பெற்றுக்கொண்டார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்