புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருவாரூர் அருகே புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-04-16 23:00 GMT
திருவாரூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதற்கு மாற்றாக புதிய மதுக்கடைகள் அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதில் குடியிருப்பு பகுதிகளில் கடை அமைக்க இடம் பார்க்கப்படுவதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரும்பண்ணையூரில் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் இருந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில் புதிதாக கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் கட்டிடத்தை கட்டி வருகிறது. இதனையறிந்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முற்றுகை போராட்டம்

ஆனாலும் மதுக்கடை கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் இணைந்து பெரும்பண்ணையூர் கடைவீதியில் நேற்று திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை திறக்கக்கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைடுத்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்