வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2017-04-16 22:30 GMT

வாடிப்பட்டி,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உள்ள 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர். அந்த நாட்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அவர் 3–வது நாள் உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

வாடிப்பட்டியில் தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஏசுவின் ஜீவநீருற்று அருமருந்து மூலம் பக்தர்களின் தீராதபிணிகளை தீர்த்து எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளியையொட்டி புனித வார சடங்குகள் வழிபாடுகள் 3 நாட்கள் நடந்ததுன. முதல்நாள் புனித வியாழன் அன்று மாலை 6 மணிக்கு ஆண்டவர் ஏசுவின் கடைசி இரவு உணவு திருப்பலி நடந்தது. அதில் பாதம் கழுவும் சடங்தை தொடர்ந்து நள்ளிரவு வரை ஆராதனை நடந்தது. மறுநாள் புனித வெள்ளியன்று மாலை 4 மணிக்கு சிறப்பு சிலுவைப்பாதையும், அதை தொடர்ந்து 5.30 மணிக்கு புனித வெள்ளி திருச்சடங்குகளும். மறுநாள் புனித சனியன்று ஏசுகிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழிப்பு திருச்சடங்குகளும் நடந்ததுன.

ஈஸ்டர் பண்டிகை

நேற்று (16–ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அதிகாலை 5.30 மணி, 8.30 மணி, 11 மணி, மாலை 5மணிக்கு சிறப்பு திருப்பலிகள் செய்யப்பட்டன. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, கேரளா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். நிகழ்ச்சியில் 40 நாட்கள் விரதம் கடைபிடித்தவர்கள் ஈஸ்டர் சிறப்பு பிராத்தனைகள் செய்து விரதத்தை நிறைவு செய்தனர்.

மதுரை, திண்டுக்கல், தேனிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக ஆலயத்திற்கு வந்தனர். ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை ஆலய பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில், நிர்வாகி ஜோசப், அகஸ்டின், அருள்மொழி, இருதயராஜ் உள்பட பங்குஇறைமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்