பலத்த சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது.

Update: 2017-04-16 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. இதனால் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறையுமா? என்று மக்கள் எதிர்பார்த்து ஏங்கி இருந்தனர்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணி அளவில் திடீரென்று பலத்த சூறாவளிக்காற்று வீச தொடங்கியது. இந்த சூறாவளிக்காற்று 5 மணி வரை ½ மணி நேரம் நீடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் லேசான மழை பெய்தது.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

சூறாவளிக்காற்றின் காரணமாக சத்தியமங்கலம், வேடசின்னானூர், நடுப்பாளையம், தங்கநகரம், முள்ளிக்காபாளையம், செண்பகப்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தும், முறிந்தும் நாசம் ஆனது.

சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூரில் உள்ள சத்தியமங்கலம்–கோவை ரோட்டில் உள்ள புளியமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

ஆலங்கட்டி மழை

பவானிசாகர் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நேற்று மாலை 3.30 மணிக்கு கருமேகங்கள் திரண்டன. பின்னர் 4 மணிக்கு சூறாவளிக்காற்று வீச தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது சிறிய அளவிலான ஐஸ் கட்டிகள் வீட்டின் மேற்கூரைகள் மீது விழுந்தன. இதனால் தடதடவென சத்தம் கேட்டது. சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து ஐஸ் கட்டிகளை கையில் பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த ஆலங்கட்டி மழை 4.30 மணி வரை நீடித்தது.

அதுமட்டுமின்றி பலத்த சூறாவளிக்காற்றில் பவானிசாகர், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுரோடு பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

மேலும் புஞ்சைபுளியம்பட்டியில் மாதம்பாளையம் ரோட்டில் உள்ள கந்தசாமி என்பவரின் தறிப்பட்டறையின் தகர மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. நல்லவேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் இருந்த மின் கம்பம் சாய்ந்தது. இதன்காரணமாக ஜே.ஜே.நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சூறாவளிக்காற்றால் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே நகர்ள உள்பட பல்வேறு இடங்களில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தது.

நஷ்ட ஈடு வழங்கவேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடும் வறட்சியிலும் கிடைக்கின்ற தண்ணீரை வைத்து வாழைகளை பயிரிட்டிருந்தோம். பல்வேறு இடங்களில் விலை கொடுத்து தண்ணீர் மிகவும் கஷ்டப்பட்டு வாழை மரங்களை வளர்த்தோம். உரம், மருந்து போன்றவைகளுக்காக நகைகளை அடகு வைத்தும், வங்கிகளில் கடன் வாங்கியும் வாழைகளை பயிரிட்டோம்.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளிக்காற்றின் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து நாசம் ஆகிவிட்டன. எனவே அரசு எங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று தெரிவித்தனர்.

தாளவாடி

தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள எரகநல்லி, சிமிட்டஹள்ளி, தொட்டகாஜனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 6.45 மணி வரை நீடித்ததது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழையால் எரகநல்லியில் இருந்து சிமிட்டஹள்ளி செல்லும் ரோட்டில் உள்ள தரை மட்டப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக அந்த ரோட்டில் 15 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்