சூளகிரி, தேன்கனிக்கோட்டை அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
சூளகிரி, தேன்கனிக்கோட்டை அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மோதுகானப்பள்ளி உள்ளது. இந்த கிராமத்தில் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு தினமும் மதுபிரியர்கள் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு மது குடிக்க வரும் பலரும் மது குடித்தவாறு, அந்த பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சாலையில் செல்லும் பெண்களை கேலி–கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் அந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி 50–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை கடையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2–வது நாளாகஏற்கனவே நேற்று முன்தினம் சூளகிரி அருகே மோதுகானப்பள்ளியில் இந்த கடைக்கு சற்று தொலைவில் புதிய மதுக்கடையை அமைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டு, மது பாட்டில்களை இறக்க விடாமல் தடுத்தும் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக மோதுகானப்பள்ளியில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டைஇதே போல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாட்றாம்பாளையம் கிராமத்தில் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த மதுக்கடையை அகற்றக்கோரி கடையின் முன்பு அமர்ந்து அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.