டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
தென்தாமரைகுளம் அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்தாமரைகுளம்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. குமரி மாவட்டத்திலும் ஏராளமான மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் மதுக்கடையை தென்தாமரைக்குளம் அருகேயுள்ள கோவில்விளையில் ஒரு தனியார் கட்டிடத்தில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
இந்த இடத்தில், டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று கோவில்விளை வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தைபோராட்டத்துக்கு ச.ம.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தென்தாமரைகுளம் ஊர்தலைவர் தங்கப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திடீரென நடந்த மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை துணை சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.