‘பகைவருக்கும் அன்பு செலுத்துவோம்’ முதல்–அமைச்சர் நாராயணசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2017-04-15 23:15 GMT

புதுச்சேரி

புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

கிறிஸ்தவ மக்களுக்கு ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏசு கிறிஸ்துவின் போதனைகள் எல்லோருக்கும் பொதுவானது. எல்லோரிடமும் அன்பு பாராட்டுதல், ஏழைகளுக்கு உதவுவது, இரக்கம் காட்டுவது, பிறரை மன்னிப்பது, பகைவர் மீதும் அன்பு செலுத்துவது போன்ற மதிப்பீடுகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால் மனித சமுதாயம் வளர்ச்சி பெறும்.

இந்த பண்புகளை நாம் எல்லோரும் கடை பிடிப்போம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம். மகிழ்ச்சியும், சமாதானமும் அனைவருக்கும் உரித்தாகுக என்று உளமாற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வைத்திலிங்கம்

சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுவை மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ மக்களுக்கு ஏசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஈஸ்டர் என்பது மறுபிறப்பின் குறியீடாகும். மேலும் ஏழை எளியோர்கள், திக்கற்றவர்கள், ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் மின்தங்கி இருப்பவர்களுக்கு நாம் செய்யும் எந்த தொண்டும், சேவையும், தியாகமும் எப்போதும் வீண் போகாது என்பதை குறிப்பதாகும். நாம் செய்யும் தொண்டு மீண்டும் வலுவுடன் உயிர்த்தெழுந்து வளரும்.

ஏசு சிலுவையின் மூலம் அறியாமையால் செய்தோரின் பாவங்களை சுமந்தார். நாமும் ஏசுவின் வழியில் சென்று அறியாமையால் பாவம் செய்பவர்களை மன்னிப்போம். ஈஸ்டர் தினத்தில் மற்றவர்களின் குற்றங்களை மன்னிக்கவும், அனைவரிடம் அன்பு காட்டவும், ஏழை எளியோருக்கு உதவி செய்யவும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் எம்.பி.

ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மனித குலத்தை வாழ்விக்க ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்னாளாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு நாம் செய்யும் தியாகமும், அப்பழுக்கற்ற தொண்டுகளும் வீண்போகாது என்பதை காட்டும் அற்புத திருநாள் ஈஸ்டர். ஏசுபிரான் ஏழை, எளிய மக்களின் துயரங்களை சுமந்தவர். சிலுவையில் அறைப்பட்ட போதும், நாங்கள் செய்கிறது இன்னது என்பதை அறியாதவர்கள் இவர்கள். எம்பொருட்டும் இவர்களை மன்னியுங்கள் என்று வேண்டி எதிரிகளுக்கான மன்றாடியவர்.

பகைவர்களுக்கு அன்பு செய்தும், பாமரர்களுக்கு அன்புகாட்டி உதவி செய்வதும் அவர் அளித்த சிறந்த போதனைகள் ஆகும். மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஏசுபிரான். அவரது போதனையின்படி குற்றங்களை மன்னித்து, அனைவரிடமும் அன்பு செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து ஈஸ்டர் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவா

தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘அன்பின் திருவுருவமாம் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொணடாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத்திருநாளாக மலரட்டும். இந்த இனிய வேளையில் உலகில் அமைதி நிலவவும், மனித நேயம் தழைக்கவும், ஏசுபிரான் காட்டிய நல்வழிப்பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு வாழ உறுதி ஏற்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்