சார்க்கோப் அருகே கழிமுக கால்வாயில் மிதந்த பொம்மை உடலால் பரபரப்பு

சார்க்கோப் அருகே கழிமுக கால்வாயில் மிதந்த பொம்மை உடலால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-15 22:30 GMT

மும்பை,

சார்க்கோப் அருகே கழிமுக கால்வாயில் மிதந்த பொம்மை உடலால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கால்வாயில் மிதந்த உடல்

மும்பை காந்திவிலி, சார்க்கோப் அம்பே மாதா மந்திர் செக்டர் 6–ம் பகுதியில் உள்ள கழிமுக கால்வாயில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் உடல் மிதப்பதை அப்பகுதியை சேர்ந்த பிவா ஜாதவ் கண்டார். அவர் உடனே இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதற்கிடையே கால்வாயில் உடல் மிதப்பதாக செய்தி பரவியதால் அப்பகுதி பொதுமக்கள் அங்கு கூடினர். இந்தநிலையில் சார்க்கோப் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

வைக்கோல் பார்சல்

இந்தநிலையில் கழிமுக கால்வாயில் மிதந்த உடலை தீயணைப்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் துணியை பிரித்து பார்த்த போது, உள்ளே வைக்கோல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது டி.வி சீரியல் குழுவினர் படப்பிடிப்பு நடத்துவதற்கு பொம்மை உடலை கழிமுக கால்வாயில் போட்டு சென்றது தெரியவந்தது.

கடந்த ஆண்டு இதேபோல்...

கடந்த ஆண்டு சார்க்கோப் பகுதியை சேர்ந்த ஹேமா உப்பாதியா, அவரது வக்கீல் ஹரிஷ் பாம்லே படுகொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் பார்சல் செய்யப்பட்டு கழிமுக கால்வாயில் வீசப்பட்டு இருந்தது. அதேபோல இந்த பொம்மை உடலும் இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்