தேனியில் 105.5 டிகிரி வெயில் வாட்டியது சுற்றுலா இடங்கள் வெறிச்சோடின
தேனியில் 105.5 டிகிரி வெயில் வாட்டியதால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் சுற்றுலா இடங்கள் வெறிச்சோடின.
தேனி
தேனி மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீதத்திற்கும் மேல் வனப்பகுதிகள் நிறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் கோடை காலம் என்றால் 100 டிகிரியை வெயில் தொட்டாலே அது அபூர்வமான நிகழ்வாகவே இருந்தது. சராசரி வெயில் அளவு 92 டிகிரியில் இருந்து 97 டிகிரியாக இருந்தது. காலநிலை மாற்றம், பசுமை மரங்கள் பறிபோனது, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை இழந்தது, மரங்கள் கடத்தலால் வன வளம் அழிக்கப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக தேனி மாவட்டத்தின் பசுமை வளம் கொஞ்சம், கொஞ்சமாக பறிபோனது.
அதன் விளைவுகளை தற்போது வெயிலின் தாக்கத்தின் மூலம் உணர முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோடை காலம் என்பது கடுமையான வெயிலின் தாக்கத்தை கொடுத்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு பருவமழைகள் பொய்த்த நிலையில், தற்போது வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இங்கு வெயில் அளவு 100 டிகிரியை தாண்டிய நிலையிலேயே உள்ளது.
105.5 டிகிரிநேற்று வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களை விட அதிகமாக இருந்தது. நேற்று 105.5 டிகிரி வெயில் அளவு பதிவானது. காலை 8 மணிக்கே சூரியன் ஆக்ரோஷ கதிர் வீச்சுக்களை தொடுக்கத் தொடங்கியது. பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பெரும் தயக்கம் ஏற்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலைகள் அனலாய் கொதித்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகத்தில் நெருப்பை அள்ளி வீசியது போல் வெப்பத்தின் தாக்கம் கொடூரமாக இருந்தது.
சாலையோர வியாபாரிகள் பெரும் சிரமம் அடைந்தனர். குடை பிடித்துக் கொண்டு வியாபாரம் செய்த போதிலும் சாலைகளில் இருந்து கிளம்பிய வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்தனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் தலையில் முக்காடு போட்டபடி சென்றனர்.
வெறிச்சோடினவெயிலின் தாக்கம் எதிரொலியாக பழச்சாறு விற்பனை கடைகளிலும், சாலையோர கம்பங்கூழ், தர்பூசணி விற்பனை செய்யும் இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டன. முக்கிய சுற்றுலா இடங்களான சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததாலும், கும்பக்கரை அருவியில் தண்ணீர் குறைவாக விழுவதாலும் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வைகை அணை, மஞ்சளாறு அணை போன்ற சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
கொதிக்கும் கோடையின் உக்கிரத்தால், உடலில் கொப்பளம், கட்டி போன்றவை ஏற்பட்டு சரும நோயால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறான பாதிப்புகளுக்கு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. எனவே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை வருமா? என்று மக்கள் காத்திருக்கின்றனர்.