போடி அருகே மதுபான கடையை மூடக்கோரி 4 கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
போடி அருகே மதுபான கடையை மூடக்கோரி 4 கிராம மக்கள் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த கடை மூடப்பட்டது.
போடி,
தமிழகத்தில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள அரசு மதுபான கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மதுபான கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளை வேறு பகுதியில் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் நெடுஞ்சாலையில் செயல்பட்ட வந்த மதுபான கடை மூடப்பட்டது. அந்த கடை மேலசொக்கநாதபுரம் – மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் ஒத்தபுளியமரம் என்ற இடத்தில் திறக்கப்பட்டது.
பொதுமக்கள் முற்றுகைஇந்த கடையை மூடக்கோரி கீழசொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம், அம்மாபட்டி, மேலசொக்கநாதபுரம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போடி புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடை உள்ள பகுதி வழியாக பள்ளி மாணவ– மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கடையை மூடவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அந்த கடையை வேறு இடத்தில் மாற்றும்படி ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர். உடனே மதுபான கடை மூடப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.