திருமூர்த்தி அணையில் வாகனங்களை சுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும்

உடுமலை அருகே திருமூர்த்தி அணைப்பகுதிக்கு செல்பவர்கள் வாகனங்களை அணை தண்ணீரில் சுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-04-15 22:30 GMT
தளி,

உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணை மூலமாக பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. மேலும், திருமூர்த்தி அணையை நீர் ஆதாரமாக கொண்டு உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம் மற்றும் பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தற்போது குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் முடிவடைந்து சோதனை முறையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருமூர்த்தி அணை அருகே அமணலிங்கேஸ்வரர் கோவில் வண்ணமீன் காட்சியகம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு இல்லம் ஆகியவை அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை சூழலை ரசிக்கவும், அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ், மினிடெம்போ உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

துர்நாற்றம்

அவ்வாறு வருகின்ற வாகனங்களை அதன் டிரைவர்கள் அணைப்பகுதிக்கு கொண்டு சென்று தண்ணீரில் இறக்கி சுத்தம் செய்கின்றனர். அப்போது வாகனங்களில் இருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகள் அணையின் நீர்பரப்பில் படர்ந்து வருகின்றது. மேலும், வறட்சியால் கோவில் அருகே உள்ள ஆற்றிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அணைப்பகுதிக்கு சென்று குளித்து வருகின்றனர். அப்போது அவர்கள் சோப்பு மற்றும் எண்ணெய், ஷாம்பு உள்ளிட்டவற்றை குளிப்பதற்காக பயன்படுத்துவதால் அணையில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மாசு அடைந்து துர்நாற்றம் வீசிவருகின்றது. தற்போது வறட்சியின் காரணமாக அணையிலும் நீர்இருப்பு குறைந்து காணப்படுகிறது. மேலும், வருகிற கோடை காலத்தில் தற்போது உள்ள தண்ணீரை கொண்டே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

தடை

இந்த சூழலில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அசுத்தம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அணையில் உள்ள தண்ணீர் நிறம்மாறி வருகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் மூலமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அணைப்பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்வதற்கும், குளிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்