வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7,344 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது

பொள்ளாச்சி அருகே தம்பம்பதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7,344 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது; அ.தி.மு.க. பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2017-04-15 23:00 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே தம்பம்பதியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 7 ஆயிரத்து 344 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

மதுபாட்டில் பதுக்கல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தம்பம்பதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்து வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொள்ளாச்சியில் உள்ள பேரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி உத்தரவின் பேரில் மதுவிலக்கு கூடுதல் துணை சூப்பிரண்டு சந்திரமோகன், துணை சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் தம்பம்பதியில் உள்ள தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

அப்போது அங்கு உள்ள வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். 6,384 ‘குவாட்டர்’ பாட்டிலும், 960 ‘புல்’ பாட்டில்களும் சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 344 மதுபாட்டில்கள் 213 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் சோமந்துறைசித்தூர் கூட்டுறவு வங்கி தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான கோபாலகிருஷ்ணன் என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவருகிறது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் சோமந்துறை சித்தூரை சேர்ந்த செந்தில்வேல் (46), பாலக்காடு ரோடு அய்யம்பாளையத்தை சேர்ந்த மெஞ்ஞானமூர்த்தி (48) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக இருந்ததால் காரைக்காலில் நந்தகுமார் என்பவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, தம்பம்பதியில் உள்ள தோட்டத்து வீட்டில் கோபாலகிருஷ்ணன் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, பொள்ளாச்சியில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தலைமறைவாக உள்ள கோபாலகிருஷ்ணனை பிடிபட்ட பின்தான் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

பொள்ளாச்சி அருகே வீட்டில் ஆயிரக்கணக்கில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்