மாவட்டத்தில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்தியகோபால் பேட்டி

சேலம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

Update: 2017-04-15 23:00 GMT

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் மற்றும் வறட்சி தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சம்பத் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் கூட்டத்தில் மேட்டூர் சப்–கலெக்டர் மேகநாதரெட்டி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சவுந்தரராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜேந்திரபிரசாத் மற்றும் அனைத்து உதவி கலெக்டர்கள், அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் முதன்மை செயலாளரும் வருவாய் நிர்வாக ஆணையாளருமான சத்தியகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:–

மேலும் ரூ.100 கோடி ஒதுக்கீடு

சேலம் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மாநிலத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்க ரூ.501.70 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும், எதிர்வரும் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடியுடன் கூடுதலாக ரூ.40 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.30 கோடியுடன் கூடுதலாக ரூ.35 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.25 கோடியுடன் கூடுதலாக ரூ.25 கோடியும் ஆக மொத்தம் கூடுதலாக குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மேட்டூர் அணையிலிருந்து நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் மே மாதம் இறுதிவரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் முறைப்படுத்தி வழங்கப்படுகிறது. மேலும், நிலத்தின் கீழ் நீர் ஆதாரங்கள் இருக்கும் இடங்களை கண்டறிந்து புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், பழைய ஆழ்துளை கிணறுகளை சீரமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொலைநோக்கு பார்வையுடன் மழைப்பொழிவின் போது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் வரத்து வாய்க்கால்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது.

குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வணிக ரீதியில் வழங்கப்படும் நீர் பயன்பாட்டை குறைத்திடவும், முறையான அனுமதி இல்லாமல் எடுக்கப்படும் குடிநீர் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்புடையவர்கள் மேல் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்