அஞ்செட்டி அருகே வனத்துறை ஜீப்பை உருட்டி தள்ளிய காட்டு யானை ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

அஞ்செட்டி அருகே வனத்துறையினர் சென்ற ஜீப்பை காட்டு யானை உருட்டி பள்ளத்தில் தள்ளியது.

Update: 2017-04-15 23:00 GMT

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி காப்பு காட்டில் உள்ளது முகிலிபிளாட். இந்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு யானை ஒன்று மதம் பிடித்தபடி சுற்றுகிறது. இந்த யானை அருகில் உள்ள குந்துகோட்டைக்கு சென்று விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது. மேலும் அந்த பகுதியில் வனப்பகுதியையொட்டி செல்வோரை துரத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல அந்த காட்டு யானை குந்துகோட்டை பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி வனச்சரகர் தனபால் தலைமையில் 7 பேர் கொண்ட வனத்துறையினர் ஒரு ஜீப்பில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

ஜீப்பை உருட்டியது

அந்த நேரம் திடீரென்று ஆக்ரோ‌ஷமாக வந்த யானை வனத்துறையினரின் ஜீப்பை நோக்கி ஓடி வந்தது. இதை பார்த்த வனத்துறையினர் செய்வதறியாமல் திகைத்து போனார்கள். அவர்கள் உடனடியாக ஜீப்பில் இருந்து குதித்து நாலாபுறமும் சிதறியடித்தபடி ஓடினார்கள். அந்த நேரம் யானை வனத்துறையினரின் ஜீப்பை துதிக்கையால் தூக்கி ‘‘டமார் டமார்’’ என்று ஓங்கி தரையில் அடித்தது. மேலும் தனது தலையால் முட்டி அந்த ஜீப்பை உருட்டி தள்ளியது. இதில், ஜீப் அந்த பகுதியில் உள்ள ஒரு புதரில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் உயிர்தப்பினர்.

இதைத் தொடர்ந்து சற்று நேரம் பிளிறியபடி சுற்றிய யானை பின்னர் அங்கிருந்து முகிலிபிளாட் வனப்பகுதிக்கு சென்றது. பின்னர் வனத்துறையினர் சற்று தூரமாக நின்றவாறு பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும் அந்த யானையை அஞ்செட்டி வனப்பகுதிக்கு விரட்டினார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

குந்துகோட்டை பகுதியையொட்டி உள்ள இந்த காட்டு யானையை அஞ்செட்டி வனப்பகுதிக்குள் விரட்டி உள்ளோம். கிராம மக்கள் யாரும் வனப்பகுதியையொட்டி ஆடு, மாடுகளை மேய்க்கவோ அல்லது விறகுகள் எடுக்கவோ வர வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்