திருப்பத்தூர், சிவகங்கையில் மீட்கப்பட்ட குழந்தைகள் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
திருப்பத்தூர் அருகே கடந்த மாதம் 26–ந்தேதி ஆதரவற்ற நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
சிவகங்கை,
திருப்பத்தூர் அருகே கடந்த மாதம் 26–ந்தேதி ஆதரவற்ற நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இந்த குழந்தைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை திருமங்கலம் தாலுகா அழகுசிறையில் உள்ள கருணை இல்ல தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் கடந்த 3–ந்தேதி சிவகங்கையை அடுத்த மலம்பட்டி பகுதியில் மீட்கப்பட்ட பெண் குழந்தை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அக்குழந்தை மதுரையில் உள்ள கிரேஸ் கென்னட் கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த 2 குழந்தைகளையும் மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில் மாவட்ட சமூகநல அதிகாரி உமையாள் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜெயப்பிரகாஷ், குழந்தை நலக்குழு தலைவர் பால்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஒப்படைத்தனர்.