பனப்பாக்கம் அருகே பரிதாபம்: கணவன் – மனைவி தூக்குப்போட்டு தற்கொலை தகராறில் விபரீதம்

பனப்பாக்கம் அருகே தகராறில் கணவன் – மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2017-04-15 23:30 GMT

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம், பனப்பாக்கத்தை அடுத்த திருமால்பூர் கிராமத்தில் உள்ள யாதவ் தெருவை சேர்ந்தவர் கோபு (வயது 32), நெசவு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் கீதாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபு கோவித்துக் கொண்டு வீட்டிற்கு வெளிளே உள்ள வாராண்டாவில் வந்து படுத்து தூங்கியுள்ளார். ராஜேஸ்வரி தனது மகள் கீதாலட்சுமியுடன் அறைக்குள் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் வெகு நேரமாக கேட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோபு வீட்டிற்கு வந்து, வாராண்டாவில் படுத்து இருந்த கோபுவை எழுப்பி, குழந்தையின் அழுகை சத்தம் கேட்கிறது என்று கூறியுள்ளனர்.

கணவன் – மனைவி தற்கொலை

உடனே கோபு மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று, ராஜேஸ்வரி படுத்து இருந்த அறையை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கோபு கதவின் துவாரம் வழியாக பார்த்தபோது, ராஜேஸ்வரி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோபு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அப்போது ராஜேஸ்வரி தான் அணிந்திருந்த துப்பட்டவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மனைவி இறந்த துக்கம் தாளாமல் கோபு குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் மனைவியின் உடலை கட்டிப்பிடித்து அழுதது கல்நெஞ்சையும் கரையை வைப்பது போல் இருந்தது.

பின்னர் கோபு வீட்டுக்கு பின்னால் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்குள் வராததால் வீட்டுக்குள் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து பின்பக்கமாக சென்று பார்த்தனர். அப்போது செல்பான் டவரில் கோபு தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இனஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கணவன் – மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் ராஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்