லாரி-ஸ்கூட்டர் மோதல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பலி இறந்த மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்

ஹாசன் டவுனில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவி பலியானார். அவருடைய கண்களை அவரது பெற்றோர், தானம் செய்தனர்.

Update: 2017-04-14 23:26 GMT
ஹாசன்,

ஹாசன் தாலுகா அனுமந்தாபுரா பகுதியைச் சேர்ந்தவர் புட்டராஜ். இவரது மனைவி கீதா. இந்த தம்பதிக்கு சவுந்தர்யா(வயது 19) என்ற மகள் இருந்தார். இவர் ஹாசன் டவுன் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுந்தர்யா தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் ஹாசன் தொழிற்பேட்டை பகுதி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி சவுந்தர்யா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சவுந்தர்யா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கண்கள் தானம்

இதுகுறித்து தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சவுந்தர்யா இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அவரது பெற்றோர் சவுந்தர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். தனது மகள் இறந்தாலும் அவளால் பிறர் வாழ வேண்டும் என முடிவு செய்த சவுந்தர்யாவின் பெற்றோர், சவுந்தர்யாவின் கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி சவுந்தர்யாவின் கண்களை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்து மற்றொருவருக்கு பொருத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்த விபத்து குறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்