மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திமபாளையத்தில் தர்ணா போராட்டம்
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்
பெ.நா.பாளையம்,
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட மத்திமபாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் மதுக்கடை அமைப்பதற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடைக்கு கட்டிடம் கட்டும் பணி அருகே பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கமாட்டார்கள் என உறுதி அளித்தனர் இதை தொடர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.