கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் தமிழ்புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

தமிழ்புத்தாண்டையொட்டி கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

Update: 2017-04-14 23:00 GMT

அழகர்கோவில்,

மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் தமிழ்புத்தாண்டு (ஹேவிளம்பி) தினத்தையொட்டி அதிகாலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று புனித நீராடி ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பிரசித்தி பெற்ற சோலைமலை முருகன் கோவிலுக்கும் சென்று பக்தர்கள் வழிபட்டனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. அருகில் உள்ள வித்தக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி எருக்கம்பூ, மல்லிகை, ரோஜா, சம்மங்கி, அருகம்புல் உள்ளிட்ட பல்வேறு வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நெய்விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளழகர் கோவில்

அழகர்மலை அடிவாரத்தில் உள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில், ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் சந்தனம் சாத்தி, மாலைகள் அணிவித்து தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு முதல் ஏராளமான பக்தர்கள் அழகர்கோவிலில் குவியத் தொடங்கினர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்