விழுப்புரத்தில் அதிகாலையில் பரபரப்பு: உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் திடீர் போராட்டம்

விழுப்புரத்தில் அதிகாலையில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-14 23:30 GMT

விழுப்புரம்,

சென்னையில் இருந்து விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சாவூருக்கு தினமும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை எலக்ட்ரிக் என்ஜின் பொருத்தப்பட்டு வரும். பின்னர் விழுப்புரத்தில் இருந்து எலக்ட்ரிக் என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு தஞ்சாவூருக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அப்போது சென்னையில் இருந்தே இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத 4 பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிரமத்துடன் பயணம்

இதனால் முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு இடம் கிடைக்காத 100–க்கும் மேற்பட்ட பயணிகள், முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர். இதன் காரணமாக அந்த பெட்டிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள், ரெயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டனர். அதற்கு அவர், விழுப்புரம் செல்லும் வரை பொறுத்துக்கொள்ளுமாறும், விழுப்புரம் சென்றவுடன் மாற்று ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இருப்பினும் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தனர்.

இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலைய 6–வது நடைமேடைக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து ரெயிலின் எலக்ட்ரிக் என்ஜின் கழற்றப்பட்டு டீசல் என்ஜின் பொருத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதற்கிடையில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு பெற்று முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளை அந்த பெட்டிகளில் இருந்து டிக்கெட் பரிசோதகர் கீழே இறக்கினார். தொடர்ந்து, இவர்கள் அனைவரையும் முன்பதிவில்லாத பெட்டிகளிலேயே பயணம் செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அந்த பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைத்து பயணிகளும் அதில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கூடுதலாக ரெயில் பெட்டிகளை இணைக்குமாறு கேட்டு டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனிடையே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 3.10 மணியளவில் ரெயில் புறப்பட தயாரானது. அதற்கான அறிவிப்பும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரெயிலில் கூடுதல் பெட்டியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ரெயிலை மறித்து போராட்டம்

இந்த நிலையில் ரெயில் புறப்பட தயாரானதை அறிந்த பயணிகள் ஆத்திரமடைந்து தண்டவாளத்தில் இறங்கி திடீரென ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்துக்கொண்டும் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேல், சப்–இன்ஸ்பெக்டர் அசோகன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் அனில்சன் ஆகியோர் தலைமையிலான போலீசாரும் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பரபரப்பு

சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், முன்பதிவில்லாத பெட்டிகளிலும், மற்றும் முன்பதிவு பெட்டிகளிலும் சரிசமமாக பயணிகளை ஏற்றுவதாக அதிகாரிகள் கூறினார்கள். அதன் பிறகு அதிகாலை 4.25 மணிக்கு பயணிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அதே ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிகளிலும் சரிசமமாக ஏறினார்கள். அதனை தொடர்ந்து 4.30 மணிக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி– சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களும் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு 15 நிமிடம் தாமதமாக வந்து அடுத்த 5 நிமிடங்களில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டன.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் அதிகாலை நடந்த இந்த ரெயில் மறியல் போராட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்