ரெயிலில் பயணிகளிடம் நகை பறிப்பு: கைதான 2 கொள்ளையர்களுடன் சேலம் போலீசார் மும்பை விரைவு தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க தீவிரம்

ரெயிலில் பயணிகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு கைதான 2 கொள்ளையர்களுடன் சேலம் போலீசார் மும்பைக்கு விரைந்துள்ளனர்.

Update: 2017-04-14 22:30 GMT

சேலம்,

திருவனந்தபுரத்தில் இருந்து புதுடெல்லிக்கு கடந்த வாரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், தர்மபுரி மாவட்டம் தொட்டம்பட்டி ரெயில் நிலையம் அருகே சிக்னல் கிடைக்காமல் திடீரென நடுவழியில் நின்றது. அப்போது ரெயிலில் ஏறிய மர்ம ஆசாமிகள், 5 பெண்களிடம் இருந்து நகைகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுபற்றி, சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி மராட்டியத்துக்கு சென்றனர். பின்னர், சோலாப்பூர் என்னும் இடத்தில் கொள்ளை கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அப்போது, மராட்டிய மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் தானேகவுன் கிராமத்தை சேர்ந்த சுனில் ஹீல்லப்பா போஸ்லே (வயது 40), சோலாப்பூர் மாவட்டம் கோனேரி கிராமத்தை சேர்ந்த அமர் மோகன்காலே (20) ஆகிய இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். 3 பேர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்ட இருவரையும் போலீசார் சேலத்திற்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

3 பேரை பிடிக்க தீவிரம்

அதன்பிறகு அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் இருவரையும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. பின்னர், ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கொள்ளையர்கள் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிப்பதற்காக, கொள்ளை கும்பல் தலைவன் சுனில் மற்றும் அமரை அழைத்துக் கொண்டு ரெயில்வே இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், இளவரசி ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் நேற்று மும்பைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள், கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்