“இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்”

உலக நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கும் தமிழகமும், தமிழரும் யுகங்கள் கடந்து நிலைத்து இருக்க பெரிதும் உதவியது நம் தமிழ்மொழி.

Update: 2017-04-14 08:48 GMT
பேசும் மொழியை பெற்ற தாயை போல கருதியது தமிழினம். தமிழைத் தம் உயிராய் போற்றிய பல தமிழ் காவலர்களால் தான் மூவாத மொழியாய் அது மிளிர்கிறது. நம் மொழியின் ஆழமும், அழகும், அற்புதமான இலக்கணமும் தமிழை தாய்மொழியாக பெறாத பலரையும் ஈர்த்திருக்கிறது.

“குணநலம் சான்றோர் நலனே” என வள்ளுவரால் போற்றப்பட்ட சான்றோர் பலர் நம் தமிழகத்தில் தோன்றி தமிழ் வளர்த்துள்ளனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியநாடு, சிலப்பதிகாரம் தந்த சேரநாடு, ஏடு தந்த மன்னன் இராசராசன் ஆண்ட சோழநாடு என தமிழகத்தின் பல பகுதிகளில் பிறந்து வளர்ந்தோர் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தமிழ் கற்று நம் மொழியை போன்றிய சான்றோரும் உள்ளனர். ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்ற பலரும் இவ்வாறு தமிழ்ப்பணி ஆற்றியுள்ளனர். மு.வரதராசனார், கி.ஆ.பெ.விசுவநாதம், மூதறிஞர் ராஜாஜி, அவ்வை சண்முகனார், தமிழ் தாத்தா உ.வே.சா, அவரது ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வள்ளலார் போன்ற பலரும் தன்னலம் கருதாது ஆற்றிய தமிழ் தொண்டே இன்று வரை நம் மொழியை மறையாமல் காத்து வருகிறது.

19-ம் நூற்றாண்டிலே தமிழுலகத்திலே தலைசிறந்த ஆசிரியர் என்று உலகப்புகழ்பெற்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, திருவாடுதுறை ஆதினத்தின் வித்துவானாக இருந்தார். அவரிடம் கற்று தமிழறிஞர்களாக ஒளிர்ந்தவர் பலர். அவர்களுள் மிக முக்கியமானவர் டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர். அவருக்கு ஐம்பெரும் காப்பியங்களையும், சங்க இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியவர் சேலம் ராமசாமி முதலியார்.

“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாபிலோனிய மொழியிலும், எகிப்து மொழியிலும் மறுக்க முடியாத தமிழ்ச்சொற்கள் அடிப்படையாய் உள்ளன” என்று ஆய்வு முடிவு வெளியிட்டு கி.மு. 5000 ஆண்டுகளிலேயே தமிழ்மொழி இருந்திருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் பாவாணர். இது தமிழின் தொன்மைக்கு தலைசிறந்த இலக்கிய சான்றாகும். கன்னித்தமிழின் புராணகால மரபை ஓர் அறிவு மரபாக்கிய பெருந்தகை பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி தமிழின் பழங்கால வரலாற்றையும், வருங்கால ஆக்கத்தையும் இயம்பியவர்.

அதேபோல 19-ம் நூற்றாண்டில் உரைநடை தமிழுக்கு புதுவாழ்வு தந்த மூவர் ராமலிங்க வள்ளலார், யாழ்ப் பாணநல்லூர் ஆறுமுகநாவலர், மாயூரம் வேதநாயகம்பிள்ளை.

சமயத்துறையில் பெருஞ்சுடராய் திகழ்ந்த வள்ளலார் உலக பற்றை துறந்த போதும் தமிழ்ப்பற்றை துறக்கயியலாத தூயவர். இவர்கள் மட்டுமல்லாது இத்தாலியில் பிறந்து கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தம் பெயரை விட “வீரமாமுனிவர்” என்கிற தமிழ் பெயராலேயே அறியப்பட்ட தமிழ்க்காவலர். தேம்பாவணி முதல் பல இலக்கண நூல்களை இயற்றியவர். திருவள்ளுவநாயனார் அருளிச் செய்த திருக்குறள் என்ற பெயரில் திருக்குறளை உலகறியச் செய்தவர் வீரமாமுனிவர்.

மேலும் ஜார்ஜ் உக்லோ போப் எனப்படும் ஜி.யு.போப், திருக்குறள், திருவாசகம் போன்ற தமிழின் அறக்குவியல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேய பாதிரியார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கியிருந்து மறைந்தார்.

 இவரது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று அவரது ஆசைப்படி பொறிக்கப்பட்டுள்ளது. இப்படி சாதி, மத, இன, மொழி, நாடு வேறுபாடின்றி தமிழை தம் உயிராய்க்கருதிய சான்றோர் பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களின் தணியாத தமிழ்த்தாகத்தாலும், தன்னலமற்ற தொண்டாலும் தான் என்று பிறந்தவள் என்று கூற முடியாத தமிழன்னை இன்று வரை புதியவளாய், இளையவளாய், பெரியவளாய் வாழ்வாங்கு வாழ்கிறாள்.

மேலும் செய்திகள்