உளவியல் பார்வையில் உருவான விழா

‘விழாக்கள்’ வாழ்வின் ஓட்டத்தில், களைப்பில், சோர்வில் நாம் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர்களின் உளவியல் பார்வையால் உருவாக்கப்பட்டவை.

Update: 2017-04-14 08:32 GMT
மாதம் மும்மாரி மழை பொழிந்து, வளம் சிறந்து வாழ்ந்த தமிழர்கள், மாதம் ஒன்று அல்லது இரு விழாக்களை ஏற்படுத்தினர். அந்தவகையில் வரலாற்று பெருமைமிக்க தமிழர் விழாக்களில் ஒன்றான, தமிழ்ப்புத்தாண்டின் சிறப்புகள் குறித்து, கோவை மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை சே.அமலிலூசியா கூறுவதை காண்போம்:

தமிழ் மாதங்கள் பன்னிரெண்டும், அதனையொட்டி அமைந்துள்ள நட்சத்திரங்களும், ராசிகளும், நம் முன்னோர்களின் விஞ்ஞான, மெய்ஞான சிந்தனைகளில் உதித்தவை. தமிழ் மாத பெயர்கள் வானவியலை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு ஆண்டில் சூரியனை சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் ஆகும்.

இது ஒரு வட்டம் எனக்கருதினால், அதன் முதற்புள்ளியை எப்படி கணிப்பது என்ற கேள்வி எழும். பூமி சாய்வான நிலையில் சுழலும் கோள். பூமியின் சாய்வால் சூரியன் வடக்கு, தெற்காக நகர்கிறது. சூரியன் பூமத்தியரேகையில் நேராக ஒளிரும் மாதத்தை முதற்புள்ளியாக கொண்டு, அதாவது ஆண்டின் தொடக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதுவே ஆண்டின் முதல் மாதமாகும்.

 இதன்படி சித்திரை மாதமே, தமிழ் ஆண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது.
நமது நாடு பூமத்தியரேகையையொட்டி அமைந்துள்ளது. 12 ராசியால், 12-ஆக பகுக்கப்பட்டுள்ள ஆண்டில் சூரியன் நம் மீது நேராக ஒளிரும் போது, அது மேஷராசியில் இருக்கும். இதனால் மேஷம் முதல் ராசியாகவும், சித்திரை முதல் மாதமாகவும் உள்ளன. இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிஜூ தீவுகளில் சித்திரை மாதப்பிறப்பே, தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் தமிழர்கள் இந்த நாளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தமிழ்ப் புத்தாண்டு கி.பி. 78-ல் வட பகுதியில் வாழ்ந்த மன்னனான சாலிவாகனன் என்பவரால் முதலில் கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதை மறுப்பவர்களும் உள்ளனர். அவர்கள் கனிஷ்கன் என்ற மன்னனால் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கூறுகின்றனர்.

உலகம் முழுவதிலும் சூரியனை அடிப்படையாக வைத்து தான் காலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 2 கண்ணிமை-ஒரு நொடி, 2 கை நொடி-ஒரு மாத்திரை, 2 மாத்திரை-ஒரு குரு, 2 குரு-ஒரு உயிர், 2 உயிர்-ஒரு சணிகம், 12 சணிகம்-ஒரு வினாடி, 60 வினாடி-ஒரு நாழிகை, 2½ நாழிகை-ஒரு முகூர்த்தம், 2 முகூர்த்தம்-ஒரு சாமம், 4 சாமம்-ஒரு பொழுது, 2 பொழுது-ஒரு நாள், 5 நாள்-ஒரு பக்கம், 2 பக்கம்-ஒரு மாதம், 6 மாதம்-ஒரு அயனம், 2 அயனம்-ஒரு ஆண்டு, 60 ஆண்டு-ஒரு வட்டம், 360 ஆண்டு-ஒரு தேவ ஆண்டு, 12 ஆயிரம் தேவஆண்டு-ஒரு சதுர்யுகம்.

யுகங்களில் கிருதயுகம், கிரேதாயுகம், துவாபரயுகம் ஆகியவை முடிந்து, தற்போது கலியுகம் நடந்துகொண்டிருக் கிறது. இவ்வாறு பல லட்சம் ஆண்டுகளுக்கு மேலான காலக்கணக்குகள் நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டவை. இத்தகைய காலச்சுழற்சியில் தமிழர்கள் நாள் மற்றும் ஆண்டை பொழுதுகளாக பிரித்து வைத்துள்ளனர்.

பொழுதை வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று வகுத்துள்ளனர். ஒரு ஆண்டை இரண்டிரண்டு மாதங்களாக்கி 6 பெரும் பொழுதுகளாக பிரித்துள்ளனர். சித்திரை, வைகாசி-இளவேனில்; ஆனி, ஆடி-முதுவேனில்; ஆவணி, புரட்டாசி-கார்காலம்; ஐப்பசி, கார்த்திகை-கூதிர் காலம்; மார்கழி, தை-முன்பனி; மாசி, பங்குனி-பின்பனி.

இந்த பெரும்பொழுதின் தொடக்கம்தான் இளவேனில் காலம். இந்த காலத்தின் முதல் மாதம் சித்திரை. இது வசந்தகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் ஆண்டில் சித்திரை முதல் மாதமாக கருதப்படுவதற்கும், இது ஒரு காரணம் ஆகும். இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத்தான் தமிழில் காலந்தேர் என்கிறோம். காலம்+தேர். இதுவே ஆங்கிலத்தில் காலண்டர் என்று குறிப்பிடப்படுகிறது.

தமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாத பிறப்பு பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. சித்திரை திருநாளில்தான் பிரம்மா புவியை தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. சித்திரை நட்சத்திரத்தில், சிவபெருமானை வரைய, சித்திரகுப்தன் தோன்றிய நாள். இந்த மாதத்தில் திருதியை திதியில் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் (மீன்) எடுத்தார்.

ராம அவதாரம், இந்த மாதத்தில் எடுக்கப்பட்டதுதான் எனினும், இந்தியாவில் பங்குனி வளர்பிறையில்தான் ராமநவமி கொண்டாடப்படுகிறது. கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள், இந்த நாளிலேயே நடைபெறும். இந்த நிகழ்வு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் ரிஷப வாகனத்தில் சிவன் உமையாளுடன், அகத்தியருக்கு காட்சியளித்தார். இந்தவிழா நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான கோவில்களில் பிரமோற்சவம் இந்த மாதத்தில்தான் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழாவில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வானது, சைவ, வைணவ சமயங்களை ஒன்றிணைக்கும் விழாவாகும். சித்திரை கோடைகாலமாக இருப்பதாக, கோடை தெய்வமாக மாரியம்மனை கருதி விழாக்கள் எடுக்கப்பட்டன. கோடைவிழா, கொடைவிழா என மருவி தென் மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நம்முடைய முன்னோர்கள் குடியிருக்கும் வீதிகளை குறிக்க ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி, சித்திரை வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி என்று பெயரிட்டு அழைத்துள்ள சான்றுகளும் உள்ளன. உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள வீதிகள். இங்கு விழாக்கள் அந்தந்த மாதங்களின் பெயர்களில் அமைந்த வீதிகளில் கொண்டாடப்படுகின்றன.

சித்திரை மாதத்தில் விவசாய பயிர்கள் கிடைக்காது. முக்கனிகள் மட்டுமே கிடைக்கும். இதனால் இந்த மாதத்தில் கனிகளை படைத்து வழிபாடு செய்கிறோம். இந்த மாதத்தில் கொன்றை பூக்கள் பூத்து குலுங்கும். இது இறை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. இதேபோல் கண்ணாடி, அணிகலன்கள், பணம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கமே கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வரும் விசு பண்டிகை.

இந்நாளில் கண்ணாடி வைத்து வழிபடுவதற்கு ‘உன்னை நீ எண்ணிப்பார்த்து, உழைப்பதற்கு உன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும்’ என்பதுதான் காரணம். அணிகலன்கள், பணம் வைத்து வழிபடுவது, ‘பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை’ என்பதை குறிப்பிடுகிறது.

சித்திரை மாதப் பிறப்பான தமிழ்ப்புத்தாண்டை நாமும் கொண்டாடி, நம் முடைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமையாகும்.

மேலும் செய்திகள்