ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி 34 பேர் கைது

நாகர்கோவிலில், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-13 23:00 GMT
நாகர்கோவில்,

ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எபிலைசியஸ் ஜோயல் என்பவரை தாக்கியதாக கூறப்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் 13–ந் தேதி (நேற்று) உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இதனால் நேற்று முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக பகுதியிலும், முன்புறத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வாக்குவாதம்

இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தின் முன்புற 2–வது வாயிலின் அருகே ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலன், மாவட்ட செயலாளர் ரெஜீஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, நிர்வாகிகள் தங்கமோகன், செல்லசுவாமி, மலைவிளை பாசி, வக்கீல் மரிய ஸ்டீபன் உள்ளிட்டோரும் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் முன்புறம் வந்து, தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே போலீஸ் அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் உண்ணாவிரத போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதியில்லை. தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

34 பேர் கைது

மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். போலீசார் தங்களை அப்புறப்படுத்தாமல் இருக்க சங்கிலி போன்று ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக ஒரு பெண் உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்