திண்டுக்கல் அருகே மதுக்கடையை மூடக்கோரி 4 கிராமமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே மதுக்கடையை மூடக்கோரி 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-13 23:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் வத்தலக்குண்டு சாலையில் ஒரு கோவில் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது. இதையடுத்து கொட்டப்பட்டியில் இருந்து புதுப்பட்டிக்கு செல்லும் வழியில் மதுக்கடை அமைக்கப்பட்டது.

இதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் கிராமமக்கள் மனு கொடுத்தனர். எனினும், மதுக்கடை மூடப்படவில்லை. இது கிராம மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

சாலை மறியல்

இதைத் தொடர்ந்து பொன்மாந்துறை, புதுப்பட்டி, பள்ளப்பட்டி, கொட்டப்பட்டி ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்–பழனி சாலையில் திரண்டனர். பின்னர் திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மதுக்கடை அமைந்துள்ள வழியாக தான் பொன்மாந்துறை, புதுப்பட்டி, கொட்டப்பட்டி பகுதி மக்கள் சென்று வருகின்றனர். மேலும் பஸ் வசதி இல்லாததால் வேலைக்கு செல்லும் பெண்கள் இரவு நேரத்தில் அந்த வழியாகவே நடந்து செல்லும் நிலை உள்ளது. இதற்கிடையே அங்கு மதுக்கடை செயல்பட்டால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, மதுக்கடையை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக திண்டுக்கல்–பழனி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்