நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் பட்டதாரி பெண் தஞ்சம்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2017-04-13 23:00 GMT

நாமக்கல்,

சேந்தமங்கலம் அருகே உள்ள வாழவந்தி கோம்பை வால்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சங்கர் (வயது 27), டிப்ளமோ படித்துள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான அபிராமியும் (21) கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரியவரவே, அபிராமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி சுயம்பு பட்டாளம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

இதற்கிடையே, அபிராமியின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடியினர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரனிடம் புகார் மனு ஒன்றை அபிராமி கொடுத்தார். அதில், எனது குடும்பத்தினர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, அவர்களால் எனக்கும், எனது கணவர் குடும்பத்திற்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்