டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு: போலீசார் தாக்குதலை கைவிட வேண்டும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேட்டி
டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடும் பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும்
பரமக்குடி,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி பரமக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– உச்சநீதிமன்றத்தில் பா.ம.க. தொடர்ந்த வழக்கால் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அவற்றை அரசு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து தமிழக மக்கள் போராடி வருகின்றனர். மீண்டும் கடைகளை திறக்கக்கூடாது என போராடிய பெண்கள் மீது திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதுபோன்று பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது போலீசார் தாக்குவதும், வழக்கு பதிவு செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மது மனித உயிரை அழிக்கிறது. பெண்களின் தாலியை பறிக்கிறது. சாலை விபத்துக்கள் அதிகரிக்கிறது. ஆகவே அதற்கு எதிராக பொதுமக்கள் போராடுகின்றனர். அரசு, போராடும் மக்கள் மீது காவல்துறையையும், டாஸ்மாக் அதிகாரிகளையும் ஏவி விட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
பூரண மதுவிலக்குஇதனை கைவிட வேண்டும். போராட்டத்தால் தான் சுதந்திரம் கிடைத்தது. ஆகவே மதுவிற்கு எதிராக போராடினால் தான் மதுவை ஒழிக்க முடியும். மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு மத்தியப்பிரதேச அரசு வழிகாட்டுகிறது. மத்திய பிரதேச முதல்–அமைச்சர் சிவராஜ்சிங் கவுரா மதுக்கடைகளை மூடிய இடத்தில் மீண்டும் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உணர்ந்த அவர் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளார்.
இதேபோல தமிழகத்திலும் கடைபிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தமிழக அரசு அடக்குமுறையை கையாண்டால் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியது போல் மதுக்கடைகளை அகற்றக்கோரி மீண்டும் புரட்சி வெடிக்கும். அந்த போராட்டத்துக்கு பெண்களும், இளைஞர்களும் தயாராகி விட்டனர். தமிழக அரசு பெரும் நெருக்கடியில் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம்நெசவுத்தொழில், மீன்பிடித்தொழில் உள்பட அனைத்து தொழில்களும் நசிந்து விட்டன. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதுபெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கும், விவசாயிகள் தன்னிறைவு பெறுவதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கண்மாய், கால்வாய்கள், ஏரிகளை தூர்வார வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினை கானல் நீராக உள்ளது. நிரந்தர தீர்வுக்கு வழியில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும். இருநாட்டு மீனவர்களையும் பரஸ்பர உணர்வோடு சகோதர நம்பிக்கையோடு ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க சுமூகமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.