பெரம்பலூர் மதனகோபால சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூர் மதனகோபால சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

Update: 2017-04-02 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபால சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பட்டாச்சாரியார் வேதமந்திரம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் மதனகோபால், பட்டாபிராமன் பட்டாச்சாரியார், திருவல்லிக்கேணி பட்டாச்சாரியார் விக்ரமன் குழுவினர் நடத்தி வைத்தனர்.

விழாவில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், பொது செயலாளர் வக்கீல் சீனிவாசமூர்த்தி, பொருளாளர் சஞ்சீவிராவ், முரளி அய்யங்கார், ஸ்ரீராமன்ஆதித்யா, மயூரப்பிரியன், வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் தர்மராஜன், பூக்கடை சரவணன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ஆடிப்பெருக்கு விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏற்று நடத்தியது.

10-ந்தேதி தேரோட்டம்

தொடர்ந்து நேற்று இரவு ஹம்ச வாகனத்தில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபால சாமி வீதிஉலா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், வெள்ளிகருட வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

8-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்ப பல்லக்கு ஊர்வலமும், 10-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும், இரவு தீர்த்தவாரி வண்டிக்கால் பார்த்தல் உற்சவமும் நடக்கிறது.

ஏகாந்தசேவை

11-ந்தேதி துவாதச ஆராதனம், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், 12-ந்தேதி திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் வீதி உலாவும், 13-ந்தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் விழாவும் நடக்கிறது.

14-ந்தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு விடையாற்றி விழாவும், 17-ந்தேதி பெருமாள் திருமஞ்சனம், கம்பம் ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவிராயருக்கு சந்தனகாப்பு அலங்காரம், இரவு செங்குந்த மகாஜனசங்கம் சார்பில் பெருமாள் ஏகாந்தசேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகத்தினர், கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்