அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-04-02 23:00 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சியை அடுத்துள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் வணிக வளாகம் உள்ளது. இதில், மளிகை கடை, லாரி டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ் அலுவலகங்கள், செல்போன்களுக்கு ரீ சார்ஜ் செய்யும் கடை, ஓட்டல், பெண்கள் அழகு நிலையம் மற்றும் ரத்த பரிசோதனை நிலையம் உள்ளிட்டவை அடுத்தடுத்து உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல அனைவரும் தங்களது அலுவலகம் மற்றும் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் அந்த வணிக வளாகத்தின் தரை தளத்தில் மளிகை கடை நடத்தி வரும் மாருதி நகரை சேர்ந்த நிர்மல்(வயது 36) என்பவர் கடையை திறப்பதற்காக நேற்று காலை சென்றார். அப்போது அவருக்கு சொந்தமான 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் முதல் தளத்திற்கு செல்லும் மாடிப்படியின் இரும்பு கதவின் பூட்டும் உடைந்து கிடந்ததை கண்ட நிர்மல், இதுகுறித்து வணிக வளாகத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

பணம்-நகை கொள்ளை

தகவலின்பேரில் வணிக வளாக உரிமையாளர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இருந்த நெ.1 டோல்கேட்டை அடுத்துள்ள கோகுலம் காலனியை சேர்ந்த பங்க்ராஜின்(47) லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம், விருத்தாசலத்தை சேர்ந்த வேல்முருகனின்(38)டிராவல்ஸ் அலுவலகம் மற்றும் நெ.1 டோல்கேட் அருகே உள்ள பழூர் மெயின் ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார்(33) என்பவரின் செல்போன் ரீ சார்ஜ் கடை ஆகியோரின் கடையின் பூட்டுகளும் உடைந்து கிடந்தன.

இதுகுறித்து, கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் மற்றும் அந்த கடைகளை நடத்தி வருபவர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நெ.1 டோல்கேட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசாரும், கடைகளை நடத்தி வருபவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள மேஜை டிராயர் மற்றும் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. ஆனால், டிராவல்ஸ் அலுவலகம் மற்றும் ரீ சார்ஜ் கடைகளில் பணமோ, விலை உயர்ந்த பொருட்களோ எதுவும் இல்லாததால் கொள்ளை போகவில்லை.

போலீசார் வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடைகளை நடத்தி வருபவர்கள் கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நெ.1 டோல்கேட் அருகே அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்