விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் நெடுவாசல் போராட்டக்குழு அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக நெடுவாசல் போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Update: 2017-04-02 23:00 GMT
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கு இளைஞர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மத்திய மந்திரி, மாநில அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்கள் கொடுத்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை பொதுமக்கள் வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி இந்த திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அப் பகுதி மக்கள் இந்த திட்டத்துக்கு எதிராக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர்.

பெரிய அளவில் போராட்டம்

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெடுவாசலில் உள்ள நாடியம்மன் கோவிலில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டம் முடிந்தவுடன் நெடுவாசல் போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறுகையில், டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை சந்தித்து நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு அவர், மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என கூறினார். ஆனால், அதே மந்திரி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதைப்போல மாநில அரசும் இந்த திட்டத்தை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என உறுதி அளித்தது. ஆனால் மாநில அரசின் செயல்பாட்டிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால், நாங்கள் மீண்டும் போராட்டத்தை பெரிய அளவில் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக, வருகிற 6-ந் தேதி நம்மாழ்வாரின் பிறந்தநாளன்று மீண்டும் கூட்டம் நடத்த உள்ளோம். அந்த கூட்டத்தில் போராட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்வது, என்னென்ன போராட்டங்கள் நடத்துவது என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்