சந்திரபாடி கடற்பகுதியில் கானாங்கெளுத்தி மீன்கள் அதிகம் சிக்கின

சந்திரபாடி கடற்பகுதியில் கானாங்கெளுத்தி மீன்கள் அதிகம் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2017-04-02 22:45 GMT
பொறையாறு,

நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, வெள்ளக்கோவில், சின்னங்குடி, சின்னமேடு, பெருமாள்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த தாக்கம் கடலின் மேற்பரப்பிலும் காணப்படுவதால் பெரியவகை மீன்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விடுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலையில் சிறிய வகை மீன்களே சிக்கின.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களின் வலையில் கானாங்கெளுத்தி என்னும் சிறியவகை மீன்கள் அதிகம் சிக்கின. இந்த வகை மீன்களால் லாபம் கிடைக்கும் என்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பம் தாங்க முடியாமல் பெரியவகை மீன்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிடுகின்றன. எனவே பெரிய வகை மீன்கள் வலையில் சிக்குவது அரிதாக உள்ளது. இதனால் தற்போது வலையில் கானாங்கெளுத்தி, முதக்கெண்டை, பொறுவா, தேங்காய்ப்பாறை என சிறியவகை மீன்களே சிக்குகின்றன. இந்த மீன்களால் அதிக லாபம் கிடைப்பது இல்லை. இந்தநிலையில் தற்போது கடலுக்கு சென்று மீன்பிடித்ததில் கானாங்கெளுத்தி என்னும் சிறியவகை மீன்கள் வலையில் அதிகம் சிக்கின. இந்த மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் இருப்பதாகவும், சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதாகவும் கூறி அசைவ பிரியர்கள் விரும்பி வாங்குவர். இதனால் இந்த வகை மீன்கள் தினமும் எங்கள் வலையில் சிக்கினால் லாபத்துடன் சந்தோஷமாக இருப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்