டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-02 23:00 GMT
ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டு, ஆறுமுகநேரி– அடைக்கலாபுரம் மெயின் ரோடு முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 31–ந் தேதி இரவு அந்த பகுதியில் திரண்டனர். போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

மறியல் செய்ய முயற்சி

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக வதந்தி பரவியது. இதனையறிந்த பொதுமக்கள் நேற்று காலையில் ஆறுமுகநேரி– அடைக்கலாபுரம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த இடத்தில் தற்போது டாஸ்மாக் கடை அமைக்க எந்தவித உத்தரவும் தரப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கழுகுமலை

இதேபோல், கழுகுமலை பஸ்நிலையத்தின் மேல்புறத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு, கழுகுமலை முருகன் கோவில் கிரிவலபாதையில் உள்ள இந்திரபிரஸ்தம் தெருவில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேற்று கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகானை நேரில் சந்தித்து, மனு கொடுத்தனர்.

அதில், தற்போது டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு அருகே பள்ளிக்கூடம், அரசு பெண்கள் விடுதி உள்ளன. முருகன் கோவில் கிரிவலபாதையில் கிரிவலத்தின் போது, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள். கிரிவலம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும். எனவே, டாஸ்மாக் கடை அந்த இடத்தில் அமைக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்