கர்நாடகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி காவிரி நீரை திறந்துவிடுவது? தேவேகவுடா கேள்வி

கர்நாடகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி காவிரி நீரை திறந்துவிடுவது? என்று தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2017-04-02 20:30 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் தண்ணீரே இல்லாத நிலையில் தமிழகத்திற்கு எப்படி காவிரி நீரை திறந்துவிடுவது? என்று தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். போராட்டம் நடத்தும் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதை தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்த சூழ்நிலையில் தமிழக அதிகாரிகள் குழுவினர் பெங்களூரு வந்து, 3 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் இருந்தால் அதை திறந்துவிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இங்கு தண்ணீரே இல்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு எப்படி காவிரி நீரை திறந்துவிடுவது?. கர்நாடகத்தில் தண்ணீர் இருப்பது போல் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் பேசுகிறார்கள். இங்குள்ள மோசமான நிலை பாராளுமன்றத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் புரிய வேண்டும். காவிரி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்புவேன்.

அக்கறை செலுத்த வேண்டும்

காவிரி நீரை பாதுகாப்பதில் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் அக்கறை செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஒவ்வொரு முறையும் காவிரி பிரச்சினை வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உத்தரவிடுகிறது. இந்த விசாரணையின்போது மத்திய அரசின் வக்கீலும் அங்கு உள்ளார். அவர் இதுபற்றி பேச வேண்டும்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது பற்றி கர்நாடக எம்.பி.க்கள் குரல் எழுப்பவில்லை. மைசூரு பகுதி விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். இதுபற்றி அரசு கவனம் செலுத்த வேண்டும். கர்நாடகத்தின் நிலை குறித்து கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

விவசாயிகள் படும் துயரங்கள்

மத்திய மந்திரி அனந்தகுமார் பிரதமருக்கு நெருக்கமாக உள்ளார். அவர் பிரதமரிடம் காவிரி நிலை குறித்து எடுத்துக்கூற வேண்டும். பா.ஜனதாவினருக்கு அடுத்த தேர்தல் பற்றிய நினைப்பு தான் உள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மாநிலத்தின் நலனை காக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். நான் மைசூரு பகுதிக்கு சென்று, காவிரி படுகையில் உள்ள அணைகளின் நிலை மற்றும் விவசாயிகள் படும் துயரங்களை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்