வேப்பனப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை 3 கிராம மக்கள் திடீர் முற்றுகை
வேப்பனப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சிமன்ற அலுவலகத்தை 3 கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது பெரியமனவாரனப்பள்ளி, கொல்லப்பள்ளி, தாசிரபள்ளி ஆகிய கிராமங்கள். இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விவசாய கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
காலிக்குடங்களுடன் முற்றுகைஇதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 200–க்கும் மேற்பட்டோர் பெரியமனவாரனப்பள்ளி ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.