பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 3¾ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2017-04-02 22:30 GMT

அணைக்கட்டு,

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.

வேலூரை அடுத்த பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே போலியோ சொட்டுமருந்து முகாம் நடந்தது. உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன் தலைமை தாங்கினார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் ராமன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். மேலும் பஸ், கார் போன்ற வாகனங்களில் சென்ற குழந்தைகளுக்கும் அவர் சொட்டு மருந்து வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:–

3¾ லட்சம் குழந்தைகளுக்கு

இந்த ஆண்டு 2017 முதல் தவணையாக வேலூர் மாவட்டத்தில் இன்றும் (நேற்று) இரண்டாம் தவணையாக வருகிற 30–ந் தேதியும் 5 வயதுக்கு உட்பட்ட 3 லட்சத்து 79 ஆயிரத்து 496 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இப்பணியினை சிறப்பாக செயல்படுத்த 2 ஆயிரத்து 393 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கூடுதலாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளிலும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப்பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம் மூலமாக போலியா சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9,466 பணியாளர்கள்

இப்பணியில் பொது சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட 9 ஆயிரத்து 466 பணியாளர்களும், 290 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பிறந்த பச்சிளங் குழந்தைகள் முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே கொடுத்திருந்தாலும், இம்முறையும் கண்டிப்பாக சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒடுகத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கைலாஷ் மற்றும் செவிலியர் பாலாஜி, மருத்துவ குழுவினர் சொட்டு மருந்து வழங்கினர்.

மேலும் செய்திகள்