தெய்வம் கொடுத்த தேவதை

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், நடு ராத்திரியில் விரைவு ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்த மனு, அந்த இரவு தனக்கு மிகமோசமான இரவாக இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

Update: 2017-04-02 07:08 GMT
(கைகளை இழந்தவருக்கு கரங்கள் மட்டுமல்ல, காதலும் கிடைத்த உருக்கமான கதை)

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், நடு ராத்திரியில் விரைவு ரெயிலில் பயணம் செய்துகொண்டிருந்த மனு, அந்த இரவு தனக்கு மிகமோசமான இரவாக இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அன்று ரெயிலில் இருந்து விழுந்தபோது, முறிந்து போனது அவரது கைகள் இரண்டும் மட்டுமல்ல! எதிர்காலத்தையும் சேர்த்து அந்த இருட்டில் தொலைத்துவிட்டு, உயிரை மட்டும் பிடித்துக்கொண்டார்.

இன்று, தானம் பெற்ற இரண்டு கைகள் அவரோடு இணைந்து நம்பிக்கையூட்ட, காதலியாக கிடைத்த மனைவி ஸ்ரீஜாவும் சேர்ந்து அவர் வாழ்க்கையில் களிப்பூட்டிக்கொண்டிருக்கிறார்.

கைகளை இழக்க காரணமாக இருந்த ஆபத்தான ரெயில் பயணத்தில் இருந்து அவரது வாழ்க்கையை திரும்பிப்பார்ப்போம்.

அது மலபார் எக்ஸ்பிரஸ் ரெயில். ஷொர்னூர் சந்திப்பை ரெயில் கடந்து கொண்டிருந்தபோது, நேரம் நள்ளிரவு 12 மணியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அதுவரை பெர்த்தில் படுத்திருந்த மனு கீழே இறங்குகிறார். வாசலில் வெளிநாட்டு இளைஞர்கள் சிலர் நின்று சிகரெட் பிடித்து க்கொண்டிருக்கிறார்கள். அருகே உள்ள இருக்கையில் தனியாக ஒரு பெண் உட்கார்ந் திருக்கிறார். அவர்கள் விடும் புகை சுற்றியிருக்கும் அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவு தருகிறது. ‘ரெயிலில் புகை பிடிக்கக்கூடாது’ என்கிறார்கள். வாக்குவாதமும், மோதலும் உருவாகிறது. போலீசை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது மனு நகர்ந்து வாசல் அருகில் செல்ல, வெளியே இருந்து வெளிச்சம் மங்கலாக உள்ளே வீசிக்கொண்டிருக்க, யாரோ ஒருவர் பலமாக அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள்.

‘‘பயங்கர சத்தத்தோடு நான் கீழே விழுந்தேன். எதையோ பிடிப்பதுபோல் இருந்தது. ஆனால் ரெயில் சென்று கொண்டிருந்த வேகத்தில் எதையும் பிடிக்க முடியவில்லை. என்னை தள்ளிவிட்டு அந்த ரெயில் நிற்காமல் ஓடிவிட்டது. மரண   போராட்டத்தோடு நான் மணிக்கணக்கில் அங்கே கிடந்திருக்கிறேன். அந்த வழியாக சென்ற ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் என்னை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

திருச்சூர் மெடிக்கல் காலேஜ் அவசர சிகிச்சை பிரிவில் எனக்கு நினைவு திரும்பியது. உடல் முழுவதும் பயங்கரமாக வலித்தது. என் மீது ரத்த வாடையும், நிலக்கரி வாடையும் சேர்ந்து வீசிக்கொண்டிருந்தது. கைகளை அசைக்க முயற்சித்தேன். அப்போதுதான் தண்டவாளத்திற்கும்– ரெயில் சக்கரங்களுக் கும் இடையில் சிக்கி மணிக்கட்டுக்கு கீழ் என் கைகள் முறிந்து காணாமல் போனதை உணர்ந்தேன். கடவுளே என் உயிரையும் சேர்த்து எடுத்திருக்கலாமே என்று கதறினேன். அப்போது எனக்கு 29 வயது. அப்பா, அம்மா, இரண்டு தம்பிகளை கொண்ட குடும்பத்தை தாங்க வேண்டிய என் கைகள் முறிந்து காணாமல் போய்விட்டன..’’ என்று  துக்கம் நிறைந்த நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார், மனு.

இவர் சமையல் தொழிலாளி. கைகள் இன்றி இவரால் வேலை செய்ய முடியாது. அதனால் பேட்டரியால் இயங்கும் செயற்கை கை வாங்கி இணைத்துக்கொண்டு சமாளிக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் டாக்டரின் பேட்டி ஒன்று மனுவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘‘டாக்டர் சுப்பிரமணிய அய்யர் என்பவர் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அவர் முறிந்துபோன உறுப்புகளை மீண்டும் உடலில் இணைக்க முடியும் என்று சொன்னார். அந்த பேட்டியை படித்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. சில நாட்களில் அவரை சந்தித்தேன். ‘இன்னொருவரது கைகள் கிடைத்தால் உங்கள் முறிந்த கையோடு இணைத்துவிடலாம். இதயம், ஈரல், கண்களை தானம் தர பலரும் தயாராக இருக்    கிறார்கள். ஆனால் தங்களுக்கு பிரியமானவர் களின் கைகளை முறித்து தர பலரும் விரும்புவதில்லை’ என்று டாக்டர் சொன்னார். ஆனாலும் நம்பிக்கையூட்டி, அதற்கான வாய்ப்பு களை உருவாக் கும் படி கூறினார்.

என் ரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் மூளைச்சாவு அடைந்தால், அவரது கைகளை தானமாக பெற்று, என் கைகளோடு இணைக்கவேண்டும். இறந்தவரின் கை களைத் தர அவரது உறவினர்கள் சம்மதிக்கவேண்டும். இறப்பவரும் என் வயதை ஒத்தவராக இருக்கவேண்டும். காத்திருந்துதான் ஆகவேண்டும். பதிவு செய்துவைத்துவிட்டு நான் காத்திருந்தேன்’’ என்கிறார், மனு.

அப்போது கைகள் இல்லாததால் அவர் வெளியே செல்ல மனமின்றி மூலையில் முடங்கிக்கிடந்திருக்கிறார். அருகில் உள்ள ஒரே ஒரு கடைக்கு மட்டும் சென்று அங்கிருந்து பேசிக்கொண்டிருப்பாராம். கைகள் இல்லாததால் இனி கல்யாணமும் தேவையில்லை என்று முடிவுசெய்திருக்கிறார்.

இப்படியே இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் 2015 ஜனவரி 12–ந் தேதி மனுவுக்கு திடீர் அழைப்பு வந்திருக்கிறது. ‘எர்ணாகுளத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு உடனே வாருங்கள்’ என்று அழைத்திருக்கிறார்கள்.

‘‘நான் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் சென்றேன். அங்கு சென்ற பின்புதான் எனக்காக இரண்டு கைகள் காத்திருப்பதை அறிந்தேன். பிரபலமான டாக்டர்கள் அடங்கிய குழுவும் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே ஆசியாவின் முதல் கைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. எல்லோரும் எனக்காக பிரார்த்தித்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு தனது கைகளை வழங்கிய 26 வயது வாலிபர் இந்த உலகத்தில் இருந்து விடை பெற்றிருந்தார். அவர் பெயர் பினோய்..’’ என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார், மனு.

சரித்திரத்தில் இடம்பிடித்த அந்த ஆபரே‌ஷன் முழுவெற்றி பெற்றதால் பினோய், மனு இருவரது பெயரும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. ஒரு மாதம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனு, அங்கிருந்து வெளியே வந்த பின்பு பினோயின் போட்டோவை பார்த்தார். பினோய் சிறந்த ஓவியர். அவரது கைகள் தூரிகையை பிடித்து பல அற்புதமான ஓவியங்களை படைத்திருக்கின்றன. அவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, இரு கைகளையும் தானம் வழங்கி விட்டு மரணமடைந்திருக்கிறார்.

கைகள் சேர்ந்து, சிகிச்சை முழுமையடைந்த பின்பு மனுவுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிமானம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நர்ஸ் ஸ்ரீஜாவுடன் காதல் அரும்பியிருக்கிறது.

‘‘ஸ்ரீஜா அமிர்தா மருத்துவமனையில் பத்து வருடங்களாக நர்ஸ் வேலை செய்துகொண்டிருக்கிறார். நான் வார்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் ஒரு சேவை செய்யும் ஒரு நர்சுக்கும்– சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கும் இடையேயான பந்தமாகத்தான் அது இருந்தது. நான் சந்தித்துக்கொண்டிருந்த பிரச்சினைகளால் என் மீது கருணை உருவானது. அதுவே காதலாக மாறியது. பின்பு இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தில் பினோயின் ஊரை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினார்கள்’’ என்று நெகிழ்ந்தார்.

மனுவுக்கு இப்போது புதிய வேலையும் கிடைத்திருக்கிறது.  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் ‘கவுன்சலிங் அசிஸ்டென்ட்’டாக வேலை பார்க்கிறார். உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு மனோரீதியான ஆலோசனைகளை வழங்குகிறார். தனது அனுபவங்களை எல்லாம் மற்றவர்களுக்கு ஆலோசனைகளாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஆபரே‌ஷன் முடிந்த  பின்பு இவர் தனது ‘புதிய’ கைகளை பழக்கத்திற்கு கொண்டு வர நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார். முதலில் பேனா பிடிக்கவும், கப்பை பற்றிப்பிடிக்கவும் ரொம்ப தடுமாறியிருக்கிறார். மெல்ல மெல்ல அவரது கைகள் உடலோடு இணைந்து ஒத்துழைக்கத்தொடங்கி யிருக்கின்றன.

‘‘இப்போது எனது கைகளால் கனமான பொருட்களை மட்டும் தூக்க முடியாது. மீதமுள்ள எல்லா வேலைகளையும் செய்ய முடியும். இனி எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்கிறது. எனக்கு கைகள் தந்த பினோய்க்கு நன்றி தெரிவிக்க, அவரைப் போல் நானும் அவரது கைகளால் ஓவியம் வரைய கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று உருக்கமாக சொல்கிறார்.

அவரது ஆசைகள் அரங்கேற, தெய்வம் கொடுத்த தேவதையாக உடனிருக்கிறார், ஸ்ரீஜா!

மேலும் செய்திகள்