செட்டிகுளம் தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

செட்டிகுளம் தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2017-04-01 22:30 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டா யுதபாணி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணிக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மேள தாளத்துடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

திரளான பக்தர்கள்

இதில் ஊராளிக் கவுண்டர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கணேசன், பொருளாளர் துரைராஜ், துணை தலைவர் சுப்ரமணியன், துணை செயலாளர் குணச்சந்திரன் மற்றும் செட்டிகுளம், ஆலத்தூர்கேட், இரூர், சத்திரமனை, குரூர், நக்கசேலம், புதுவிராலிப்பட்டி, பொம்மனப்பாடி, மாவலிங்கை, பாடாலூர், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், கூத்தனூர், களரம்பட்டி, அம்மாபாளையம், வேலூர், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தினந்தோறும் தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் காலை, மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்